மே 2009 | ஞானத்திருவடி | திருக்குறள் தீவினை அச்சம் சித்தர்கள் வழிபாட்டின் நன்மைகள்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை

விரோதி வைகாசி

 

விலை : ரூ.10/

நிறுவனர் ,

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. திருக்குறள் - தீவினை அச்சம் .. …………….2

2. சித்தர்கள் வழிபாட்டின் நன்மைகள் ……6

3. ஜீவகாருண்ய ஒழுக்கம்-தொடர் ……11

4. மகான் சட்டைநாதர் ஆசிநூல்-V.T.பரணீதரன் ….17

5. மகான் அகத்தீசர் ஆசிநூல்- V.T.பரணீதரன் ……..18

6. மகான் கடுவெளிச்சித்தர் பாடல்கள் ………..20

7. மகான் திருமூலதேவர் பாடல்கள் ……….23

8. வாசகர் கடிதங்கள் ……………. 27

9. ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்-தொடர்…….. 29

10. ஓங்காரக்குடில் நித்திய செயல்பாடுகள் …………….35

வெளியீடுகள் 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,

ஓங்காரக்குடில்,

113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம்.

(1 04327 – 255184, 256525, 255784.

மகான் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி

"தீவினை அச்சம் "

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.  202
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.      203
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.         204
இலன் என்று தீயவை செய்யற்க; செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.      205
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.         206
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.            207
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.             208
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.             209
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.            210
ஞானத்திருவடி கொண்ட அரங்கா போற்றி
ஞான ஆட்சி புரிந்துவரும் அரசா போற்றி
ஞானசித்தி பெற்றிட்ட தேசிகா போற்றி
ஞானியேநின் திருவடிகள் போற்றி போற்றி

போற்றியே சட்டநாதர் என் ஆசிதன்னை
பார்சிறக்க அருள்செய்த அரங்கா வாழ்க
பார்உயர அறம்புரிந்த அரசா வாழ்க
புகலவந்தேன் சித்தராம் அரங்கர் உமக்கே

வாழ்கவே மக்களும் தவம் உணர
வாழ்வுபெற இறையருளின் கடாட்சம் பெற
வாழ்வினிலே உயர்வுபெற தந்திட்ட நூல்
வளம்தரும் ஞானத்திருவடி நூலே
– மகான் சட்டைநாதர் ஆசிகாண்டம்

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள்
செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 33 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய
அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். ஆகவே இந்த மாத இதழை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்து ஞானிகளின் ஆசிபெற வேண்டுகிறேன்.

அன்புடன்,
 இரா.மாதவன்.

சிவராஜயோகி
, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு
ரெங்கராஜதேசிக சுவாமிகளின் அருளுரை


திருக்குறள்
தீவினை அச்சம் – அதிகாரம் 21 

 

தீவினை அச்சம் என்பது பாவம் செய்ய பயப்பட வேண்டும் என்பது பொருள். மிருகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒன்று மற்றொன்றை கொன்றுவிடும். அவைகளுக்கு நல்வினை தீவினை தெரிவதில்லை. அவைகளுக்கு யாரும் உணர்த்துவதும் இல்லை. ஆனால் மனிதர்களுக்கு மட்டும் தீவினை செய்தல் கூடாது என்று போது உணர்த்தப்படுகிறது. நாம் செய்கின்ற தீவினைக்கு தண்டனை உண்டு.அஞ்சாமல் துணிந்து தீயவை செய்தால் நம்மை வருத்துகின்ற எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. கை கால் ஊனமாகப் பிறப்பது பிச்சை எடுக்கின்ற நிலைமை உருவாவது போன்ற துயரங்களுக்கு அவர்கள் செய்த தீவினையே காரணம்.

ஞானிகளை பூஜை செய்தால் நாம் செல்லுகின்ற பாதை நல்லவையா? கெட்டவையா? எனத்தெரிந்து நல்லதை மட்டுமே செய்யலாம். தொன்றுதொட்டு பல பிறவிகளில் பாவம் செய்து வன்மனம் உள்ளவர்கள், துளியும் கருணை இல்லாது பிறருக்கு கொடுமை செய்வார்கள். மேலான மக்கள் தீவினை செய்ய அஞ்சுவார்கள். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் தீமை செய்ய மாட்டார்கள்.

           சிறுவயதிலேயே கொடுமையான நோய்க்கு ஆளாவது மன் செய்க பாவமே. உயிர்க்கொலை செய்தால் மூர்க்கத்தனம் உண்டாகும். அதன் பலனால் பாவம் சூழ்ந்து குடும்ப வாழ்வ கெடும். நோய் சூழும். சான்றோர்கள் தொடர்பு இருந்தால் புண்ணியம் செய்ய சொல்வார்கள்.அப்போது நம்முடைய தீவினை அகலும். தன்னைப் பற்றி சிந்திக்கும் சிறப்பறிவு உண்டாகும். நாம் பிறருக்கு நன்மை செய்யும் குணப்பண்பு உண்டாகும்.

     திருமகள் கடாட்சம் பெற வேண்டுமாயின் பூஜையும் புண்ணியமும் அவசியம். சாதி மதத்தால் மக்கள் அல்லலுறும் சூழ்நிலை அதிகமாகிக் கொண்டுள்ளது. மக்களிடம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். இல்லையேல் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கெடும். பகைமை உணர்ச்சி மேலோங்கும். அத்தகைய குணக்கேடு நீங்க வேண்டுமாயின் புண்ணியமும் பூஜையும் சிறந்தது.

 பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப்போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகில் பசுபாசம் நிலாவே.

– திருமந்திர உபதேசம்.

 

பக்தி செலுத்த செலுத்த பசு என்றால் ஆன்மா என்றும், அதுவே சூரியகலை என்றும், பாசம் என்பது உடம்பென்றும், அதுவே சந்திரகலை என்றும், ஆக உடம்பையும், உயிரையும், பதி என்ற சுழிமுனையில் ஒடுக்கினால் மீண்டும் பிறவி வராது என்று அறியலாம்.

 குறிப்பு : புண்ணியவான்கள் மட்டும் அகத்தியர், நந்தீசர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள் போன்ற ஞானிகள் திருவடியை பூசித்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வார்கள். அதாவது மோட்ச லாபம் பெறுவார்கள்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய

இராமலிங்க சுவாமிகள் அருளிய

அருட்பாவின் அமுத கலசமான

ஜீவகாருண்ய ஒழுக்கம்

என்னும் தெய்வீக நூலை யார் படிக்கிறார்களோ அவர் ஞானியாவார் என்பது சத்தியம்.

– குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் –

 

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அவர்கள் தலைமையில்

பௌர்ணமி திருவிளக்கு பூஜை

நாள் : 07.06.2009 – ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி அளவில்

இடம் : ஓங்காரக்குடில், துறையூர்.

அன்புடையீர் வணக்கம்,

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு ஞானிகளின் ஆசிபெற அன்புடன் அழைக்கின்றோம். அது சமயம் ஞானிகளை பூஜித்த அருட்பிரசாதம் (அன்னதானம்) வழங்கப்படும்.

இந்த பௌர்ணமி திருவிளக்கு பூஜைக்கு 10 மூட்டை அரிசி அன்னதானத்திற்குக் கொடுத்து பூஜை செய்பவர்கள்

K.S.பிரகாசம், பட்டிவாக்கம், சென்னை .

 

K.ஜெயமுருகன், நெசவாளர் காலனி, துறையூர்.

சிவராஜயோகி,
பரமானந்த சதாசிவ சற்குரு,

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அவர்கள் அருளிய

சித்தர்கள் வழிபாட்டின் நன்மைகள்

லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசை செய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசை செய்வாய்
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசை செய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே 
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.

– மகான் அழுகண்ண
ர்.

தமிழ்த்தாயின் தவப்புதல்வர்

மு.கருணாநிதி அவர்களின் சாதனை

     முதுபெரும் ஞானியும், முற்றுப்பெற்ற முனிவருமாகிய
ஐயன் வள்ளுவப் பெருமானுக்கு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தும், கன்னியாகுமரி கடலில்
ஐயன் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைத்தது பெருமைக்குரியது. இதற்கு முன் ஆண்ட
சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களாலும் மற்றும் பல்லவ சாம்ராஜ்யத்தாலும் மற்றும் குறுநில
மன்னர்களாலும் செய்ய முடியாத ஒன்றை திரு.கருணாநிதி அவர்கள் ஐயன் வள்ளுவப் பெருமானின்
பெருமையை உணர்ந்து ஐயன் வள்ளுவப் பெருமானுக்கு பெருமை செய்துள்ளார்கள்.

இது மிகப்பெரிய
சாதனையாகும். வள்ளுவப் பெருமானுக்கு இதுவரை இதுபோன்ற பெருமையை யாரும் தேடித்தரவில்லை.
இது தமிழர்களுக்கு ஒரு பெருமையாகும்.

அய்யன் வள்ளுவப்பெருமான் முக்காலமும் உணர்ந்த முனிவரும் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற பெருந்தகையும் ஆவார். அவர் இயற்றிய திருக்குறளைத் தொடுதலும், படித்தலும், உணர்தலுமாகிய செயல்களே உண்மையான ஆன்மீகமாகும். கடவுள் யார்? என்று தேடித்திரிவதை விட, திருக்குறள் தான் தெய்வீக நூல் என்றும், அதை இயற்றிய அய்யன் வள்ளுவப் பெருமானே கடவுள் என்றும், போற்றி வணங்கிவந்தால்
உலகோர் அடைய |முடியாத பேரின்ப வீட்டைப் பெறலாம். 
 

தமிழக முதலமைச்சரும் தமிழ்த்தாயின் தவப்புதல் வருமான மு.கருணாநிதி அவர்கள் திருவள்ளுவரை அய்யன் வள்ளுவன் என்று சொல்லியுள்ளார். அய்யன் என்றால் தலைவன் என்று பொருள்படும். ஈராயிரம் ஆண்டுகளாகவே வள்ளுவனுக்குச் சில கோவில்கள் இருந்தாலும் சென்னையில் பிரம்மாண்டமான அதிதொழில் நுட்பத்தோடு வள்ளுவர் கோட்டம் அமைத்தும், மேலும் முக்கடல் சங்கமமாகும் கன்னியாக்குமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவன் கடவுளுக்குச் சிலை அமைத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் புண்ணியம் செய்த மக்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். புண்ணியம் செய்த மக்கள் தான் தாம் மேற்கொண்ட செயல்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். 

வள்ளுவப்பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகில் உள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்தக் கலாச்சாரம் உடையவராயினும், எந்தச் சமயத்தைச் சார்ந்தவராயினும்,

எந்த இனத்தைச் சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று, திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள் செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்கு உண்டு.

வள்ளுவன் திருவடியை பூஜித்தால் முன் செய்த பாவம் தீரும், கொடிய வறுமை தீரும், கொடிய புற்றுநோய் முதல் மற்றும் எல்லா நோய்களும் நீங்கும். மேலும் ஆன்மாவைப்பற்றி அறிந்துகொள்வார்கள். ஆன்மா தோற்றமே தாய், தந்தையின் காமத்தால் தோன்றியதாகும். காமத்தால் தோன்றிய ஆன்மா மாசு பட்டிருப்பது இயற்கையே! அதன் காரணமாகவே பொல்லாத காமத்தையும் அறியாமையையும் உண்டுபண்ணும்.
அய்யன் வள்ளுவன் ஆசி இருந்தால் காமதேகமாகிய மாசு நீங்கும், அறியாமையும் நீங்கித் தெளிந்த அறிவு உண்டாகும். தனக்குள் எல்லாம் வல்ல பரம்பொருளைக் கண்டு தரிசிப்பார்கள்.

ஈராயிரம் ஆண்டு காலமாக சேர, சோழ, பாண்டியர்களாலும், மற்றும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தாலும் சிலபல குறுநில மன்னர்களாலும் மற்றும் பெரும்புகழ் வாய்ந்தவர்களாலும் சாதிக்கமுடியாத ஒன்றான மகா மகத்துவம் பொருந்திய அய்யன் வள்ளுவனுக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்தும், சிலை அமைத்தும், பெருமை செய்த முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் நீடு வாழவேண்டுமென்று மனமார வாழ்த்துகிறோம்.  

குறிப்பு: வருங்காலத்தில் உலகெங்கும் திருக்குறளை வேதமாக எண்ணிப் போற்றி வணங்கக்கூடிய காலமே ஞானச்சித்தர் காலமாகும். மேலும் ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ளவும் இனி பிறவாமையாகிய இரகசியத்தை அறிந்து கொள்ளவும் விரும்புகிறவர்கள் அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதில் ஒரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.

 (எ.கா)

  1. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
  2. உற்றார்க்கு உடம்பும் மிகை.

(குறள் :
345 – துறவு)

 பிறவி துன்பத்தை ஒழிப்பதற்கு உடம்பே மிக முக்கியமாகும். இவ்வுடம்பை காமத்திற்கு செலவு செய்து விட்டால் பிறவியை அறுக்கமுடியாது. பிறவியை அறுக்க விரும்புகின்றவர்கள் பந்த பாசத்தில் ஈடுபடாது உடம்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாதுகாத்து கொண்டவர்கள் தான் பிறப்பை அறுக்கமுடியும். அப்படி இருக்க காமத்திற்கு செலவு செய்தால் பிறவியை அறுக்கமுடியாது. எனவே பிறப்பை அறுக்க உடம்பை போற்றி பாதுகாத்துக்கொள்வதே சிறப்பறிவாகும்.

 ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.

(குறள் :
357 – மெய்யுணர்தல்)
 

உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்து வெல்ல வேண்டிய மும்மலத்தை
வென்றுவிட்டால் மீண்டும் அவருக்கு பிறவி இல்லை. மீண்டும் பிறவி வரும் என்ற ஐயம் அவர்களுக்கு வேண்டியதில்லை.

 (எ.கா)

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்

ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி – அகவல்.

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

(குறள் :
358 – மெய்யுணர்தல்)

பேதமையாகிய அறியாமையை உண்டுபண்ணுவதே மும்மலமாகும்.
மும்மலக்குற்றத்தை அறிந்து அதை வென்றவர்கள் தான் தம்முள் அருட்பெருஞ்ஜோதியை காண்பார்கள். அதுவே செம்பொருளாகிய மெய்ப்பொருளாகும். இதை அறிவதே சிறப்பறிவாகும்.

 சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்று அழித்துச்

சார்தரா சார்தரும் நோய்.

(குறள் :
359 – மெய்யுணர்தல்)

எல்லா உயிர்களுக்கும் பந்த பாசத்தை உண்டுபண்ணி மீண்டும் மீண்டும் பிறவிக்கு காரணமாகிய மும்மல பாசத்தை (ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம்) ஆசான் அகத்தீசர் துணைகொண்டு அறுத்துவிட்டால் மீண்டும் பிறவியாகிய துன்பம் அவருக்கு இல்லை.

குறிப்பு : அய்யன் வள்ளுவரை எல்லாம் வல்ல பரப்பிரம்மமாகவும்,
பரம்பொருளாகவும் எண்ணி அவர் திருவடியை பூஜித்து வந்தால் யாராலும் அறியமுடியாத பரம ரகசியங்களை
அறிந்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பது சாத்தியம்.
 

அய்யன் வள்ளுவப்பெருமான்
அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் – 1500

2. திருக்குறள் – 1330

3. ரத்தினசிந்தாமணி – 800

4. பஞ்சரத்தனம் – 500

5. கற்பம் – 300

6. நாதாந்த சாரம் – 100

7. நாதாந்த திறவுகோல் – 100

8. வைத்திய சூஸ்திரம் – 100

9. கற்ப குருநூல் – 50

10. முப்பு சூஸ்திரம் – 30

11. வாத சூஸ்திரம் – 16

12. முப்புக்குரு – 11

13. கவுன மணி – 100

14. ஏணி ஏற்றம் – 100

15. குருநூல் – 51

இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்.

குறிப்பு
:
உலகத்தில் உள்ள சில அறிஞர்களுக்கு காமதேகம் இருப்பதனால், அவர்கள் சிந்தனையும் தெளிவாக இருக்காது. அவர்கள் சொல்லுவதில் முன்னுக்குப்பின் முரண்பாடு இருக்கும். அய்யன் வள்ளுவபெருமான் காமதேகத்தை நீத்து, பொன் உடம்பு பெற்றதால், மாசற்ற தெளிந்த அறிவு இருக்கும்.
அய்யன் வள்ளுவன் சொன்ன கருத்துக்களை 
இதற்கு முன் தோன்றிய அறிஞர்களுக்கோ , இனிமேல் வரக்கூடிய அறிஞர்களுக்கோ, திருக்குறளை மாற்றவோ, மறுபரிசீலனை செய்வதற்கோ துணிச்சல் இருக்க முடியாது.
காரணம், அய்யன் வள்ளுவன் ஒளிமிக்க கடவுள்.

ஞானத்திருவடி

ஞானத்திருவடி என்ற நூலில் முற்றுபெற்ற மகான்களின் நூல்கள் இருப்பதால் அதை தொடவும் படிக்கவும் இருப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். எனவே ஞானத்திருவடி நூல் ஒரு வேதமாகும். பல வேதங்களில் சொல்லப்பட்ட எல்லா கருத்துக்களும் ஞானத்திருவடி நூலில் அடங்கியுள்ளது. இந்நூலை வாங்கி படிப்பவர் வாழ்க்கையில் பல முன்னேற்றம் உண்டாகும்; ஞானமும் கைகூடும். ஞானத்திருவடி நூலிற்கு பல மகான்கள் ஆசி வழங்கியுள்ளார்கள். அதில் பக்தி செலுத்தும் முறையும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்நூலை தொடுவதும், படிப்பதும் நன்மையை தரும். இதை மற்றவர் படிப்பதற்கு வாங்கி கொடுத்தால், கொடுப்பவர் வாழ்க்கையிலும் முன்னேற்றம் உண்டாகும். எனவே ஞானத்திருவடி நூலை பெற்று படித்து எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம். 

 

 

சந்தா புதுப்பித்தல்

அன்புள்ள சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஞானத்திருவடி மாத இதழின் சார்பாக அன்பான வணக்கங்கள். கடந்த ஓராண்டுகாலமாக ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கையாகிய ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து படித்தும், பிறருக்கு அறிமுகம் செய்தும் வரும் தங்களின் மேலான உதவிகளுக்கு நன்றிகள் பல பல.

சந்தாவை புதுப்பிக்க உங்கள் சந்தா எண் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும். சந்தாவை நேரிலோ , M.O . அல்லது D.D. மூலமாகவோ செலுத்தலாம். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

சந்தாவை புதுப்பித்தவர்கள் இச்செய்தியை பொருட்படுத்த வேண்டாம்.

 

ஞானத்திருவடி – மாத இதழ்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை

ஓங்காரக்குடில்,

113- நகர்விரிவாக்கம், துறையூர் – 621 010. திருச்சி மாவட்டம்.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய

இராமலிங்க சுவாமிகள் அருளிய

திருஅருட்பா

சுத்த சன்மார்க்க விளக்கத்தின் முதற்பிரிவாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கம்

31. மரம் முதலிய தாபரங்களில் தோன்றிய வித்துக்களை இனிஉயிரேறுதற்கிடமாகிய சடங்களென்பது எப்படி? என்னில் –

வித்துக்களில் ஜீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளையவேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும், சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன, அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம், உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி, உயிர் – நித்தியம்; உடம்பு – அநித்தியம்; நித்தியமான உயிர் – காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில், வித்துக்களைச் சடமென்று அறியவேண்டும்.

 

32. ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி? என்னில் –

நிலத்தில் கலந்த வித்திற்கு நீர் விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத்தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சக்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.

 

33. முளைகளையே பிடுங்கப்படாதென்று சிலர் சொல்லுகின்றார்கள்;

வித்து, காய், இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வது எப்படி? என்னில்

வித்து நிலத்திற் படிந்தபின் நீர்வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து, காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மை யென்றறிய வேண்டும்.

 

தாவர ஆகாரம்

34. வித்து, காய், கனி முதலியவற்றில் உயிர்க்கொலையில்லாவிடினும்,

நகம், ரோமம், சுக்கிலம் முதலியவற்றிலிருக்கின்ற அசுத்தமாவ தில்லையோ? என்னில் –தத்துவ விருத்தியும் தாது விருத்தியும் இல்லாத படியால் அசுத்தமுமில்லை . ஆகலில், மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து, காய், கனி, தழை முதலியவற்றைப் புசிப்பது ஜீவகாருண்ய விரோதமல்ல என்றறிய வேண்டும்.மாமிச ஆகாரம் நியதியல்ல 35. மாமிச ஆகாரம் – புலி முதலாகிய துட்ட மிருகங்களுக்கு நியதியாகாரமல்லவோ? என்றறிய வேண்டில்

 

மாமிச ஆகாரம் நியதியல்ல

36. மாமிச ஆகாரம் – புலி முதலாகிய துட்ட மிருகங்களுக்கு நியதியாகாரமல்லவோ? என்றறிய வேண்டில் –

அது அவ்வுயிர்களுக்குச் சிருஷ்டி நியதி ஆகாரமல்ல; பரம்பரை வழக்கத்தாற் பெற்ற ஆகாரமென்றறிய வேண்டும். ஆதலில், அதை நிவர்த்தி செய்வித்துச் சத்துவ ஆகாரங்களைப் புசிப்பிக்கும்படி செய்யவுங்கூடும். ஒரு சீலமுடையவன் கிரகத்தில் வழங்குகின்ற பூனைக்கும் நாய்க்கும்

 

 

 

வேறிடங்களிற்போய் அசுத்த ஆகாரங்கொள்ளாமல் காவல் செய்து, அடிநாள் தொடங்கிச் சுத்த ஆகார வழக்கமே செய்விக்கின்றான்; அவைகள், அவைகளைப் புசித்து உயிர் வழங்கி வருகின்றன; அப்படியே புலி, சிங்கம் முதலிய துட்ட வர்க்கங்களையும் மேல் நின்று சுத்த ஆகாரத்தால் பழக்குவாரில்லாமையால் அசுத்த ஆகாரத்தைப் பழக்கத்தாற் புசிக்கின்றன |வென்று அறியலாம்.

 

ஆகலின், ஒரு ஜீவனைக் கொன்று மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருக்குச் சம்மதமுமல்ல. ஜீவகாருண்ய ஒழுக்கமும் அல்லவென்று சத்தியமாக அறியவேண்டும்.

 

இந்த ஜீவகாருண்யமென்கின்ற சாதனத்தில் சாத்தியமாகின்ற இன்பம், அபர இன்பமென்றும், பர இன்பமென்றும் இருவகைப்படும்.

 

அபர இன்பம்

இச்சை முதலியவைகளைப் பற்றி உண்டாகின்ற துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் அபர இன்பமாகும். அவை இம்மையில் அனுபவிக்கின்ற இன்பங்களில் சில வென்றறிய வேண்டும்.

36. அவை எவை? என்னில் –

உடுப்பதற்கு வஸ்திர மில்லாமலும், இருப்பதற்கு இடமில்லாமலும், உழுவதற்கு நிலமில்லாமலும், பொருந்துவதற்கு மனைவியில்லாமலும், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலிய வேறு வேறு கருவிகளில்லாமலும், துன்பப் படுகின்ற ஜீவர்கள் விஷயத்தில் ஜீவகாருண்யந் தோன்றி உடுப்பதற்கு வஸ்திரம், இருப்பதற்கு இடம், உழுவதற்கு நிலம், பொருந்துவதற்குப் பெண், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்த போது, பெற்றுக் கொண்டவர்களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அந்த இன்பத்தைக் கண்டு, கொடுத்தவர்களுக்கு உண்டாகின்ற இன்ப விளக்கமும் கடவுள் கரணத்தால் ஏகதேசமும் – ஜீவ கரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவையாகலால் – அது அபர இன்பமென்று அறிய வேண்டும்.

 

பர இன்பம்

பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் பர இன்பமாகும். அவை இம்மையில் போக சித்திகளாலும், யோக சித்திகளாலும், ஞான சித்திகளாலும் வருகின்ற இன்பங்களும், முடிவில் அனுபவிக்கப்படும் மோட்ச இன்பமும் ஆகுமென்றறிய வேண்டும். உண்பதற்கு ஆகாரமில்லாமல் சோர்வடைந்த ஜீவர்களுக்கு ஜீவகாருண்யத்தால் ஆகாரங்கொடுக்க, உண்டு பசி நீங்கிய தருணத்தில், அந்த ஜீவர்களுக்கு அகத்தினிடத்தும் முகத்தினிடத்தும் தழைத்துப் பொங்கித் ததும்புகின்ற இன்பமும், அது கண்டபோது கொடுத்தவர்களுக்கு அகத்திலும் முகத்திலும் அவ்வாறு உண்டாகின்ற இன்பமும், – ஆன்ம சகிதமாகிய கடவுள் கரணத்திற் பூரணமாகத் தோன்றுகின்றவையாகலால் – பர இன்பமென்று அறிய வேண்டும்.

பசியின் சகியாமை

வஸ்திரம், இடம், நிலம், பெண், பொருள் முதலானவைகளில்லாமல் துன்பப்படுகின்றவர்கள், அத்துன்பங்களை மனவெழுச்சியால் சகித்துக் கொண்டு உயிர் தரித்து, தங்களாற் செய்யக்கூடிய முயற்சியைச் செய்யக்கூடும்; பசியினால் துன்பம் நேரிட்ட போது மனவெழுச்சியால் அத் துன்பத்தைச் சகித்துக்கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கில் உயிரிழந்து விடுவார்கள்.

பசி நேரிட்டபோது, பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பிள்ளைகள் பெற்றவர்களை விற்றும், மனைவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வருந்துன்பத்தை மாற்றிக் கொள்ளத் துணிவார்களென்றால், அன்னியமாகிய வீடு, மாடு, நிலம், உடைமை முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்களென்பது சொல்ல வேண்டுவதில்லை.

உலக முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும், பசி நேரிட்ட போது, தனது அதிகார வுயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் ‘பசி நேரிட்டது, என்ன செய்வது’ என்று அருகிலிருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகிறான்.

பகைவரால் எறியப்பட்டு மார்பிலுருவிய பாணத்தையும் கையால் பிடித்துக்கொண்டு எதிரிட்ட பகைவரையெல்லாம் அஞ்சாது ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும், பசி நேரிட்டபோது, சௌகரியத்தையிழந்து பசிக்கு அஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து ‘இளைப்பு வருமே! சண்டை எப்படிச் செய்வது’ என்று முறையிடுகின்றார்கள்.

இவ்வுலக போகங்களோடு இந்திரபோக முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து, முற்றுந் துறந்து, அறிவை அறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும், இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகளும், இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும், முனிவர்களும், தபசிகளும், பசி நேரிட்டபோது, தாங்கள் தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு (பிச்சை) வருகின்றார்கள்; பலி நேராதபோது நிலை கலங்கு கின்றார்கள்.

சொற்பனத்தில் ஓர் இழிவு வரினும் அதுகுறித்து உயிர்விடத்தக்க மானிகளும் பசி நேரிட்ட போது சொல்லத் தகாதவரிடத்துஞ் சொல்லி மானங்குலைகின்றார்கள்.

சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியர்களும் பசி வந்தபோது, ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர்பார்க்கின்றார்கள்.

கல்வி கேள்விகளில் நிரம்பி , அறிதற்கரிய நுட்பங்களையறிந்து, செய்வதற்கரிய செய்கைகளைச் செய்து முடிக்க வல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவுங் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள்.

இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்திற் பொங்குகின்ற காமிகளும், பசிநேரிட்ட போது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள்.

‘நாமே பெரியர், நமக்கு மேற் பெரியரில்லை ‘ யென்று இறுமாப்படைகின்ற அகங்காரிகளும், பசி நேரிட்டபோது அகங்காரங் குலைந்து ஆகாரங் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கின்றார்கள்.

ஒருவகைக் காரியங்களில் அனேக வகைகளாக உபசரிக்கச் செய்கின்ற டம்பர்களும் பசி நேரிட்டபோது, டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்.

இவரிவர் இப்படி இப்படியானால், ஒருவகை ஆகாரமுமில்லாத ஏழைகள் பசி நேரிட்டபோது என்ன பாடுபடார்கள்? அந்தக் காலத்தில் அந்த ஏழைகளுக்கு ஆகாரங் கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷ முண்டாகும்? அந்த சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபங் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்வதற்கும் அருமை என்றறிய வேண்டும்.

பசியின் அவத்தை

ஜீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில், ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது. அது மறையவே, புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது. அது சோரவே, பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது. அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது. புத்தி கெடுகின்றது. சித்தம் கலங்குகின்றது. அகங்காரம் அழிகின்றது. பிராணன் சுழல்கின்றது. பூதங்களெல்லாம் புழுங்குகின்றன , வாத பித்த சிலேட்டுமங்கள் நிலைமாறுகின்றன , கண் பஞ்சடைந்து குழிந்துபோகின்றது, காது கும்மென்று செவிடுபடுகின்றது. நா உலர்ந்து வறளுகின்றது, நாசி குழைந்து அழல்கின்றது. தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது, கை கால் சோர்ந்து துவளுகின்றன, வாக்கு தொனி மாறிக் குளறுகின்றது, பற்கள் தளருகின்றன; மல சல வழி வெதும்புகின்றது, மேனி கருகுகின்றது, ரோமம் வெறிக்கின்றது.

 

நரம்புகள் குழைந்து நைகின்றன, நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன, எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன, இருதயம் வேகின்றது, மூளை சுருங்குகின்றது, சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது, ஈரல் கரைகின்றது, இரத்தமும் சலமும் சுவறுகின்றன. மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது, வயிறு பகீரென்றெரிகின்றது, தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து விடுவதற்கு மிகவுஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.

இவ்வளவு அவத்தைகளும், ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க, நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து, உள்ளங் குளிர்ந்து, அறிவு விளங்கி, அகத்திலும் முகத்திலும் ஜீவகளையும், கடவுள் களையுந் துளும்பி, ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றது.

இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்திற்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

இதனால் நரக வேதனை, சனன வேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை யென்றும்; அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பம் என்றும் அறியப்படும்.

பசி என்பது ஓர் உபகாரக் கருவி

பசியில்லாவிடில் ஜீவர்கள் ஆகாரங் குறித்து ஒருவரையொருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பாராத பட்சத்தில் உபகாரச் செய்கை தோன்றாது; அது தோன்றாத போது ஜீவகாருண்யம் விளங்காது; அது விளங்காத போது கடவுளருள் கிடைக்கமாட்டாது. ஆதலால், பசியுங் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்றே அறியவேண்டும்.

பசியினால் துன்பப்படுகின்றவர்கள் ஆகாரத்தைக் கண்ட காலத்தில் அடைகின்ற சந்தோஷமும், தாய், பிதா , பெண்டு, பிள்ளை, காணி, பூமி, பொன், மணி முதலானவைகளைக் கண்ட காலத்திலும் அடையார்களாயின், ஆகாரம் உண்ட காலத்தில் உண்டாகும் சந்தோஷம் எப்படிப் பட்டதாகயிருக்கும் ! ஆகலால், இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும் கடவுளருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களாகவே அறியவேண்டும்.

 

தொடரும் …

ஞானத்திருவடி எனும் நூலுக்கு

மகான் சட்டைநாதர் அருளிய ஆசிகாண்டம்

ஞானத்திருவடி எனும் நூலுக்கு 

மகான் சட்டைநாதர் அருளிய ஆசிகாண்டம்

1. ஞானத்திருவடி கொண்ட அரங்கா போற்றி

ஞான ஆட்சி புரிந்துவரும் அரசா போற்றி

ஞானசித்தி பெற்றிட்ட தேசிகா போற்றி

ஞானியேநின் திருவடிகள் போற்றி போற்றி

 

 

2.போற்றியே சட்டநாதர் என் ஆசிதன்னை

புகலவந்தேன் சித்தராம் அரங்கர் உமக்கே

பார்சிறக்க அருள் செய்த அரங்கா வாழ்க

பார்உயர அறம்புரிந்த அரசா வாழ்க

 

 

3.வாழ்கவே மக்களும் தவம் உணர

வாழ்வுபெற இறையருளின் கடாட்சம் பெற

வாழ்வினிலே உயர்வுபெற தந்திட்ட நூல்

வளம் தரும் ஞானத்திருவடி நூலே

 

 

4.திருவடி நூல் திருகடாட்சம் தந்தருளும் நூல்

திருவடி நூல் அருள் விளக்கம் தந்தருளும் நூல்

திருவடி நூல் தன்னிகரில்லா தவசிகளின் நூல்

திருவடி நூல் தெய்வநூல் சட்டநாதர் வாக்கு

 

5.சட்டமுனி என் ஆசி பெற்றிட்ட நூல்

சிறப்புதரும் ஞானத்திருவடி நூலே

திட்டமுடன் தவத்திற்கு நிகரான நூல்

திருமறைநூல் ஞானத்திருவடி நூலே

 

 

6.திருவடி நூல் தினம்படிப்போர் தவசிகளாவார்

திருவடி நூல் தினம்படிப்போர் சித்திகள் பெறுவார்

திருவடி நூல் தினம்படிப்போர் ஞானிகளாவார்

திருவடி நூல் தினம்படிப்போர் புண்ணியம் பெறுவார்

 

 

7.பெறுவார்கள் சகல சௌபாக்கியங்கள்

பேசுகிறேன் ஆனந்த வாழ்வினை அடைவார்

பெறுவார்கள் பெரும்பேற்றை சட்டநாதர் வாக்கு

பேசுகிறேன் கல்வியுடன் ஞானம் ஓங்கும்

 

 

8.ஓங்குமே ஞானத்திருவடி நூல் உலகை காக்கும்

உன்னத நூல் இதனைவாங்கி ஈவோர் வாழ்வில்

ஓங்கிவரும் அருள் பலமும் புண்ணியபலமும்

உயர்வடைவார் ஆசிதந்தேன் சட்டநாதர்யான் இப்பாகம் முற்றே.

-சுபம்

26.04.2009

சுவடி ஆசான் V.T.பரணீதரன்,

மகான் அகத்தியர் நாடிஜோதிடர்,

 

செந்தண்ணீர்புரம், திருச்சி.

மகான் அகத்தீசர் ஆசிகாண்டம்

அகத்தீசன் திருவிழா அன்னதானப் பெருவிழா

சித்திரை பௌர்ணமி விழா சிறப்பு நூல்

 

1.சித்தர்களை வணங்கிவரும் அரங்கா போற்றி

சித்திகளை அடைந்துவிட்ட அரசா போற்றி

சித்தர்களை போற்றிவரும் தேசிகா போற்றி

சித்தரே நின் திருவடிகள்போற்றி போற்றி

 

 

2.போற்றியே அகத்தீசர்யான் ஆசிபாகம்

புகலவந்தேன் சித்திரை விழா சிறப்புகளோடு

பார்காக்க தவம்புரியும் அரங்கா வாழ்க

பாருலகில் சித்தர்களை துணையாய்க் கொண்டு

 

 

3.கொண்டுமே அருளாட்சி நடத்துகின்றாய்

குவலயத்தில் அறத்தினை ஓங்க வைத்தாய்

தொண்டு செய்தாய் சித்தர்களை துணையாய்க் கொண்டு

தவம்புரிந்தாய் சித்தர்களின் துணையினோடு

 

 

4.துணை நின்றேன் அகத்தியரும் உமக்குள் இருந்து

தவமே வாழ்வாய்க் கொண்ட அரங்கா வாழ்க

இணையில்லா அருட்பொருளே அரசா வாழ்க

இன்பம் தரும் கற்பகமே தேசிகா வாழ்க

 

 

5. வாழ்கவே சித்திரைநாள் முழுமதிநாள் விழா

வரம்தரும் அற்புதவிழா என்று சொல்வேன்

வாழ்வினிலே சித்திரைவிழா சித்தர்கள் விழா

வள்ளல் நின் குடிலதனில் சித்தர்கள் யாவும்

 

 

6.சித்தர்யாவும் சித்திதர வரும் விழா என்பேன்

சிறப்பு உண்டு குடில்நாடி வருபவர்க்கெல்லாம்

சித்தியுண்டு அறத்திற்கு உதவுபவர்க்கெல்லாம்

சித்தர்களின் ஆசியுண்டு அன்பர்களுக்கெல்லாம்

 

7.அன்பில் உயர்ந்து நிற்கும் அரங்கா வாழ்க

அருளாட்சி செய்து வரும் அரசா வாழ்க

அன்பே சிவமாய் கண்ட தேசிகா வாழ்க

அன்பரே நீ வாழ்க வாழ்க வாழ்த்தினேனே

 

 

8.வாழ்த்தினேன் ஞானிகளை நீ அழைத்து

வந்திருக்கும் அனைவருக்கும் அளிப்பாய் ஆசி

வாழ்வினிலே தீட்சை பெறும் அனைவருக்கும்

வளம் கூடும் நலம் கூடும் சூட்சுமம் சொன்னேன்

 

 

9.சூட்சுமமாய் உம்முள்ளே வருவது நாங்கள்

சித்திகளை வாரிவாரி வழங்குவோம் அன்று

தீட்சை பெறும் அனைவருக்கும் சித்திகள் உண்டு

தொண்டு செய்யும் அனைவருக்கும் நன்மைகள் கூடும்

 

 

10. கூடுமே குவலயத்தோர்க்கு உயர்வுகள் கூடும்

குவலயத்தை உயர்த்தும் விழா சித்திரைபெருவிழா

நாடிவர உலகத்தோர்க்கு அழைப்பு தந்தோம்

நலம் கூடும் அருள்கூடும் ஆசிதந்தேன் இப்பாகம் முற்றே.

– சுபம் –

 26.04.2009

சுவடி ஆசான் V.T.பரணீதரன்,

மகான் அகத்தியர் நாடிஜோதிடர்,

செந்தண்ணீர்புரம், திருச்சி.

 

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு

R.சுரேஷ் – 94434 21935

மகான் கடுவெளிச்சித்தர் பாடல்களுக்கு

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அவர்கள் அருளிய அருளுரை

பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்

போதகர் சொற்புத்தி போதவா ராதே

மைவிழி யாரைச்சா ராதே – துன்

மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்துசே ராதே.

 

– மகான் கடுவெளிச்சித்தர்.

ஞானத்திற்குரிய அறிவு சிறிதும் இல்லாதவர்கள் ஞானிகள் போல் வேடந்தரித்திருப்பார்கள். அவர்களை பார்ப்பதே பாபமாகும். அவர்களை பார்க்க கூடாது.

 

பிறவியை ஒழிக்கக்கூடிய மார்க்கத்தை சொல்லுவதுதான் உண்மையான வேதமாகும். மற்றதெல்லாம் பிறவியை ஒழிக்காது என்பதை அறிந்து தக்க ஆசானிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்குத்தான் உண்மை எது? பொய் எது? என்று தெரியும். இல்லையென்றால் பல்வேறு நூல்களை படித்தும் காலத்தையும் வீணாக்கி மாண்டு போவான். தக்க ஆசானை உண்மை பொருளுணர்ந்த ஆசானை நாடுவதும், அவன் சொல்வதும் வேதமாகும். மயக்கத்தை உண்டுபண்ணக்கூடிய (ஆசை) பெண்களை பாராதே! பிறவியை ஒழிக்க விரும்பினால் இதை கடைபிடிக்க வேண்டும். ஆசான் துணையால்தான் இதை கடைபிடிக்க முடியும்.

 

வைதோரைக் கூடவை யாதே – இந்த

வையம் முழுதும் பொய்த் தாலும் பொய் யாதே

வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

வீணிற் பறவைகள் மீதிலெய் யாதே .

– மகான் கடுவெளிச்சித்தர்.

ஒருவன் பொறாமை கொண்டு வைதாலும் நாம் அவன் மீது பகை கொண்டு வையக்கூடாது. (வைதல் என்பது முற்கால வார்த்தை) அவனிடமிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் பிறவியை ஒழிக்கமுடியும். யாரிடமும் பகை கொள்ளாதிருப்பதே பிறவியை ஒழிக்கும் மார்க்கமாகும்.

 

 

ஆற்றம் வீடேற்றறுங் கண்டு – அதற்

கான வழியை யறிந்து நீ கொண்டு

சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி

சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங்கொண்டு.

– மகான் கடுவெளிச்சித்தர்.

மக்கள் தொண்டுதான் சிவதொண்டாகும். உலக உயிரினங்களுக்கு செய்யக்கூடிய தொண்டுதான் சிவதொண்டாகும். முடிந்தளவிற்கு அவரவர் சக்திக்குட்பட்டு மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அவர்களது கைகளில் உணவளித்து, அவர்கள் உணவினை உண்பதை கண்டு மகிழ வேண்டும், ரசிக்க வேண்டும். இந்த துறையில் அதுபோல் நடித்து பொருளை சம்பாதிப்பவன் பலஜென்மங்களில் சொரிநாயாக பிறந்து துன்பப்படுவான். அவன் பொருளை சேர்க்க சேர்க்க இறுதியில் கடுமையான நோய் (புற்றுநோய் போன்ற) துன்பத்திற்கு ஆளாகி துன்பப்படுவான். இக்கருத்தையும் நல்லறிவு உடையோர்களே உணர்வார்கள்.

 

ஆன்மாவா லாடிடு மாட்டந் – தேகத்

தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்

வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்

வையி லுனக்கு வருமேகொண் டாட்டம்.

– மகான் கடுவெளிச்சித்தர்.

உடம்பில் உயிர் இருக்கும் வரையில் பல்வேறு கற்பனைகள் செய்து அங்கும் இங்கும் ஓடி பொருள் ஈட்டுதலும் அதன் மூலம் அற்ப மகிழ்ச்சியடைதல் இவையெல்லாம் உயிர் போனால் எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கிவிடும். ஆன்மாவாகிய உயிர் இருக்கும்போதே பல அறப்பணிகள் செய்தலும் பக்தி செலுத்துதலும் ஆகியவை செய்து ஆன்மாவிற்கு ஆக்கம் தேடிக் கொள்ள வேண்டும். அதுதான் அறிவுடையவர்கள் செயல்பாடாகும். மேலான வாழ்வாகிய ஞானவாழ்வை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சிப்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாது அடுத்த ஜென்மத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வான். வான் கதி என்பது மேலான வாழ்வு அதுவே மோட்சவாழ்வும் ஆகும். இது சான்றோர்கள் தொடர்பு இருந்தாலன்றி இதுபோன்ற சிறப்பறிவு வராது.

 

எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை

எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் – தேர்ந்து

வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த

வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

– மகான் கடுவெளிச்சித்தர்.

எட்டு என்பது அகாரமாகும். இரண்டு என்பது உகாரமாகும். இதை ஆராய்ந்து எட்டான அகாரத்தையும் இரண்டான உகாரத்தையும் புருவமத்தி என்பது நமது உடம்பிற்கு அதுதான் ஆகாயமாகும். அந்த வெட்ட வெளியில் அகாரத்தையும் உகாரத்தையும் சேர்க்க வேண்டும். வெட்ட வெளியான புருவமத்தியில் சேர்ப்பதுதான் வேதம். இதை அறிந்தவர்களுக்கு மரணமில்லை. நரைதிரை மூப்பு இல்லை. எப்போதும் சொல்லொண்ணா பேரானந்தத்தில் இருப்பார்கள். இந்த வாய்ப்பை குரு அருள் இல்லாமல் பெறமுடியாது. குரு என்பவர் மகான் அகத்தியரே ஆகும்.

மனிதனுக்கு இளமை உள்ள போது பெண்ணுறவு கொண்டு மகிழ்வான். அறுசுவை உண்டு மகிழ்வான். இன்னும் சினிமா, நாடகம் மற்றும் அநேக காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைவான். இதெல்லாம் இளமை இருக்கும் வரையில் தான் இந்த வாய்ப்பு. முதுமை வந்தால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு மாண்டுபோவான். அவன் அடையக்கூடிய இன்பங்கள் பெண்ணுறவால் வரும் உடலின்பமும், அறுசுவை உண்ணுவதால் வரும் சுவையின்பமும் இன்னும் சில இருக்கலாம். இவ்வகை இன்பங்களும் அவரவர் நல்வினையை பொறுத்தே அமையும்.

 

இந்த வுலகமு முள்ளுஞ் – சற்றும்

இச்சைவை யாமலே யெந்நாளுந் தள்ளு

செந்தேன் வெள்ளம்மதை மொள்ளு – உன்றன்

சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

– மகான் கடுவெளிச்சித்தர்.

 

இந்த உலகத்தில் இச்சையாகிய ஆசை இருக்கும் வரையில் பிறவி துன்பம் இருக்கத்தான் செய்யும். ஆசை அற்றவன் பிறவியை அறுப்பான். எனவே பிறவியை வென்றவர்கள் அத்தனை பேரும் குரு அருள் துணைகொண்டு ஆசையை வென்றவர்கள் ஆவார்கள். ஆசைதான் பிறவிக்கு காரணம் என்று அறிந்து ஆசான் துணைகொண்டு ஆசையை (அவா) அறுத்து விடுவார்கள்.

மகான் திருமூலர் பாடல்களுக்கு

சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்

அவர்கள்

அருளிய அருளுரை

மகான் திருமூலதேவர் ஞானமடைய

கடைபிடித்த கொள்கைகளும், சித்திபெற்ற முறையும்,

திருமூலதேவரை பூஜிப்பதால் வரும் நன்மைகளும்

மகான் திருமூலதேவர் காலை எழும்போதே “ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி” என்று 12 முறை சொல்லி அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் நீரே தந்து அருள் செய்ய வேண்டுகிறேன். தினமும் உனது நாமத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டுமென்றால் உமது அருள் வேண்டும். உமது அருள் இல்லாமல் உமது திருவடியை பூஜை செய்ய முடியாது. உமது அருள் கொண்டே உமது திருவடியை தினமும் பூஜிக்க உமது ஆசி வேண்டும்.

எவரொருவர் காலை எழும்போதே ஆசான் நாமத்தை மறக்காமல் சொல்லி எழுகிறாரோ அவர் நிச்சயம் ஞானசித்தி பெறுவார். முன்ஜென்ம புண்ணியபலம் உள்ளவர்கள் தான் மறவாமல் காலை எழும்போதே “ஓம் நந்தீசர் திருவடிகள் போற்றி” என்று சொல்லிதான் எழுவார்கள். தினமும் எழுந்தவுடன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிதான் காலைகடனை முடிப்பார்கள். பிறகு 10 நிமிடம் “ஓம் அகத்தீசாய நம” என்று நாமஜெபம் செய்வார்கள். இவர்கள் உயிர்கொலை செய்து புலால் உண்ணமாட்டார்கள். எந்த வேலை செய்தாலும் நாமஜெபத்தை மறக்க மாட்டார்கள். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்கள் முன்செய்த பாவங்கள் நீங்கி புண்ணியவான் ஆவார்கள். 

          நாமத்தை சொல்ல சொல்ல நாமஜெபம் செய்ய செய்யதான் ஞானத்திற்குரிய சிறப்பறிவு உண்டாகும். இவர்கள் மனைவிமக்களோடு வாழ்ந்தாலும் சிந்தையில் நந்தீசன் திருவடியை மறக்க மாட்டார்கள். இதற்கிடையில் தனது நித்திய கடமைகளையும் தவறாது செய்து கொள்வார்கள். நாமஜெபமாகிய பூஜை செய்ய செய்ய உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய சிறப்பறிவு உண்டாகும். உடம்பாகிய சந்திரகலையையும் உயிராகிய சூரியகலையையும் பிறவியை ஒழிக்கக்கூடிய சுழிமுனையையும் பூஜை செய்தால்தான் ஆசான் நந்தீசர் சிந்தையில் அமர்ந்திருந்து நல்வினை பெருக்குவதற்கு அருள் செய்வார். முன்செய்த பாவங்கள் நீங்கும். எது பாவம்? எது புண்ணியம்? என்று அறியக்கூடிய அறிவும் உண்டாகும். பாவபுண்ணியத்தை

 

அறிவதற்கு ஆசான் துணை வேண்டும். ஆசானுடைய ஆசி இல்லாமல் புண்ணிய பாவத்தை அறிந்து கொள்ள முடியாது. பாவத்தை நீக்கி புண்ணியத்தை பெருக்கிக் கொண்டவர்கள் தான் பிறவியை ஒழிக்க முடியும்.

ஆகவே மகான் திருமூலதேவர் தினமும் நந்தீசன் திருவடியை பூஜித்து ஆசானின் பூரண ஆசி பெற்றார். ஆசான் ஆசியால் வாசிவசப்பட்டு அதாவது இடகலையையும் பின்கலையையும் சுழிமுனையில் செலுத்தி விட்டால் மீண்டும் பிறவி அவருக்கில்லை. இதுவே சமாதி நிலையாகும். இந்த வாய்ப்பை பெறுவதற்கு பக்திதான் முக்கியம். ஓம் நந்தீஸ்வரா! தினமும் உனது திருவடியை பூசிப்பதற்கு நீர் அருள் செய்ய வேண்டும். உனது அருள் இல்லாமல் உனது திருவடியை தினமும் பூசிக்க முடியாது. எனவே என் உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்புகளில் கலந்து முக்திசித்தி பெற அருள் செய்ய வேண்டும். இப்படி வேண்டிக் கொண்டதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்று திருமந்திரம் இன்னும் பலநூல்களும் செய்துள்ளார். மகான் திருமூல தேவர் திருவடியை பூசிக்கின்ற மக்கள் ஞானத்திற்குரிய அறிவை பெற்று முக்திசித்தி  பெறுவார்கள்

 

வாசிவசப்பட்ட மக்கள் தான் அதாவது இடகலையையும் பின்கலையையும் சுழிமுனையில் செலுத்துகின்ற மக்கள் தான் காயசித்தி பெற்று எக்காலமும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள். மகான் திருமூலதேவரையே குருவாக ஏற்று தினமும் பூசித்து வரவேண்டும். அப்போதுதான் இந்த உடம்பையும் உயிரையும் அழியாது காப்பாற்றிக் கொள்ள முடியும். இதுபோன்று பூசித்து ஆசிபெறாமல் உடம்பை எப்போதும் இருக்குமென்று நம்பி மனைவிமக்கள் மேல் பாசம் செலுத்தி கடைசியில் நரைதிரை வந்து மூப்பு வந்து அழிந்து விடுவார்கள்.

 

யாக்கை நிலையாமை

பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்

உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்டு விரதமும்ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே.

– திருமந்திரம் 144.

 

இந்த பாடலில் முதல் வரி பண்டம்… இந்த உடம்பு கூரைவீட்டிற்கு ஒப்பானது என்றும் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதுமாக இருந்தால் கூரைவீடு இற்று மரணமடையும். நம்மோடு மனைவியோ பிள்ளைகளோ நாம் சாகும்போது துணை வரமாட்டார்கள். உடம்பும் உயிரும் திடமாக இருக்கும்போதே உடம்பையும் உயிரையும் அறிந்து அழியாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

 

திருமூலதேவர் திருவடியை பூஜிப்பவர்களுக்கு மட்டும் உடம்பையும் உயிரையும் அறிந்து அழியாமல் பாதுகாத்து கொள்வார்கள். இதற்கு உபாயம் தினமும் பூஜிப்பதோடு மட்டுமல்லாது உயிர்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் பசித்த ஏழைகளுக்கு மாதம் ஒருவருக்கோ இருவருக்கோ அன்னதானம் செய்ய வேண்டும். திருமூலதேவரை குருவாக ஏற்று பூஜை செய்து வந்தால் முக்திசித்தி பெறுவார்கள். உடம்பு அழிவதற்கு முன் மேற்சொன்ன கருத்துக்களை பின்பற்றி நடக்க வேண்டும். ஞானம் அடைவதென்றால் பலகாலம் ஆகும். அவசரப்படுபவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். எனவே பக்தி ஒன்றுதான் நம்மை உயர்த்தும். சிலபேர் ஞானம் சித்திக்க பல குருமார்களை தேடுவார்கள். கோடியில் ஒருவர் உண்மை பொருள் அறிந்து ஞானி ஆவார். பொருளறியாத (உண்மை பொருளறியாத ) போலி ஆசானிடம் சென்று பொருளையும் காலத்தையும் வீணாக்கி மாண்டு போவார்கள். ஆகவே நம்மை காப்பாற்றுவது திருமூலதேவர் திருவடியே. அவர் திருவடியை போற்றுவோம், முக்திசித்தி பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெறுவோம். அவர் திருவடியை பூஜிப்பதே வேதமாகும்.

 

“இருந்தேன் இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.”

– திருமந்திரம் 80.

பலகோடி யுகங்கள் மகான் திருமூலதேவர் கடைபிடித்த கொள்கைகள் அதாவது தினமும் எழும்போதே “ஓம் நந்தீஸ்வரா” நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஞானத்திற்குரிய அறிவையும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கும் நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும். தினமும் உன் திருவடியை பூஜிப்பதற்கு புண்ணியபலம் வேண்டும். புண்ணியபலம் இல்லாத நான் உன் திருவடியை பூசித்து ஆசி பெற்றுள்ளேன். நடக்கும் பொழுதும், உணவு உண்ணும் பொழுதும் மற்றும் எத்தொழில் செய்தாலும் “ஓம் நந்தீசாய நம” என்று தினமும் சொல்லி வந்ததால் இடகலையாகிய சந்திரகலையையும், பின்கலையாகிய சூரியகலையையும், சுழுமுனையாகிய புருவமத்தியில் செலுத்தியதால் தேக்கசடுகள் நீங்கியது அதாவது களிம்பற்று போய்விட்டது. தேகத்தில் சிறுகுற்றம் இருந்தாலும் மீண்டும் பிறவி வந்து விடும். ஆகவே சுத்தமாக களிம்பறுத்து அதாவது கசடறுத்து பலகோடி யுகங்கள் வாழ அருள் செய்திருக்கிறாய்.

 

நந்தீசன் திருவடியை பூசித்தால்தான் இடகலையும், பின்கலையும், சுழிமுனையில் ஒடுங்கும். ஒடுங்கும் பொழுது நந்தீசரும் புருவமத்தியில் ஒடுங்கி தேக்கசடை மெல்லமெல்ல அறுத்துவிட்டார். மகான் நந்தீசர் ஆசி இல்லாமல் இடகலைபற்றியோ, பின்கலைபற்றியோ , சுழிமுனைபற்றியோ அறிய முடியாது. மகான் திருமூலதேவர், நந்தீசர் திருவடியை பணிந்து பூசித்ததால் பண்டம்பெய் கூரையாகிய இவ்வுடம்பை பலகோடி யுகங்கள் அழியாமல் வாழ்வதற்கு ஆசான் நந்தீசர் அருள் செய்துள்ளார். இந்த வாய்ப்பு இராப்பகல் அற்ற இடமாகிய அதாவது சூரியகலையும், சந்திரகலையும் செல்ல முடியாத புருவமத்தியில் காற்றை செலுத்தி அமைதியாக பல ஆண்டுகள் பொறுமையாக இருந்தேன். இந்த துறையில் வாசிவசப்பட்டாலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும். (குறிப்பு : காத்திருந்தேன், பொறுத்திருந்தேன், அமைதியாக இருந்தேன்) மகான் திருமூலதேவரே

 

“கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி

இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி

மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்

குடையாமல் ஊழி இருக்கலு மாமே.”

(திருமந்திரம் 591) – என்று கூறுகிறார்.

கடைவாசலை கட்டி என்பதால் காற்று புருவமத்தியில் ஒடுங்கி மூலாதாரத்தில் ஒடுங்கிவிடும். அந்த காற்றை ஆசான் துணை கொண்டு இடைவாசலாகிய விசுக்தி என்ற கண்டஸ்தானத்தில் மூலக்கனல் வந்தால் அந்த காற்றின் துணை கொண்டு ஸ்தம்பித்தால் உள்ளே அமிழ்த பானம் சிந்தும். இதற்கு கொக்கு போல் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாது தினமும் நந்தீசரை பூஜித்தும் அவர் பெருமையை பேசியும் இருந்தால் பலகோடி யுகங்கள் வாழலாம்.

 

இந்த வாய்ப்பை பெற்றவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள். இதுபோன்ற ஞானிகளிடம் தொடர்புகொண்டு பிறப்பை ஒழிக்க வேண்டும். இவர்கள் நிலை உயர்ந்தால் பல சான்றோர்கள் போற்றி ஆசி பெறுவார்கள். இவர்கள் ஆசி பெற்றவர்களுக்கு எக்காலத்திலும் எத்துன்பமும் வராது. எனவே திருமூலர் திருவடியை போற்றுவோம்! மரணமில்லா பெருவாழ்வு பெற்று இன்புற்று வாழ்வோம்!!

 

“பதிபல வாயது பண்டிவ் வுலகம்

விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.”

– திருமந்திரம் 33.

 

தொன்மையான இவ்வுலகத்தில் கோயில் கட்டும் விதிமுறைகளை அறிந்து

கோயில்கள் கட்டுவார்கள். அதில் கற்சிலையோ அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்களை வைத்து பூஜை செய்வார்கள். மேலும் கடவுளை புகழ்ந்து பாடல்களும் இயற்றுவார்கள். எத்தனை செய்த போதிலும் அதில் பிறவியை ஒழிக்கும் மார்க்கம் இல்லை. அதில் பிறவியை ஒழிக்க முடியாது. பிறவியை ஒழிக்க வேண்டுமென்றால் உடம்பையும் உயிரையும் அறிய வேண்டும்; அறிந்து தேகக்கசடை அதாவது களிம்பை அறுக்கும் முறையை தக்க ஆசானிடம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் சராசரி மனிதன் போல் நரைதிரை மூப்பு வந்து மாண்டு விடுவார்கள். முன்செய்த நல்வினை தீவினை பற்றியும் அறிந்து கொள்ள முடியாது. தீவினை இருக்கும் வரையில் பிறவி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் தக்க ஆசானின் உபதேசம் பெறாததால் வந்த குற்றமாகும்.

ஆகவே பிறவியை ஒழிப்பதற்கு கோயில் கட்டியோ கும்பாபிஷேகம் செய்தோ பல புனித தீர்த்தங்களில் மூழ்கி வந்தாலும் பிறப்பு இறப்பு பற்றி அறியாதவர்கள் கடைசியில் மனம் நொந்து இறந்து விடுவார்கள். ஒரு மனிதன் பிறப்பை ஒழிக்க வேண்டுமென்றால் காலைக்கடனை முடித்துவிட்டு ஒரு வெண்ணிற துணியில் அமர்ந்தும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கியும் “ஓம் அகத்தீஸ்வரா” தினமும் உனது திருவடியை பூசிக்க நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று சலிப்பில்லாமல் நாமஜெபமாகிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்கின்ற மக்கள் தான் உடம்பையும் உயிரையும் அறிந்து அழியக்கூடிய இந்த உடம்பை அழியாமல் நிலையாக நிறுத்தி கொள்வார்கள்.

பூஜை செய்யும் முறை தெரியாமல்தான் சில பக்தர்களும் யோகிகளும் மாண்டு போகிறார்கள். பூஜை செய்தால் ஆசான் அகத்தீசனை பூஜை செய்ய வேண்டும். பூசிக்கும் பொழுது, அடியேனுக்கு மரணமில்லா பெருவாழ்வை பெறுவதற்குரிய அறிவையும் பரிபக்குவமும் தந்து பிறப்பிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக்கொள்ள வேண்டும். இதை சலிப்பில்லாமல் பூஜை செய்து வருபவர்கள் தான் இந்த வாய்ப்பை பெறமுடியும். ஆசான் அகத்தீசனும் சிந்தையில் தங்கியிருந்து அவ்வப்போது உணர்த்துவார். நவகோடி சித்தர்களும் ஆசான் அகத்தீசன் திருவடியை போற்றினர். மகான் திருமூலதேவரையும், மகான் நந்தீசரையும், மேலும் கருவூர் முனிவரையும், போகமகாரிஷி முனிவரையும் பூசித்தால் எளிமையில் சித்தி பெறலாம். பல சடங்குகளால் மரணத்தை வெல்ல முடியாது. முறையறிந்து பூசை செய்கின்ற மக்கள் தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்று வாழ்கின்றார்கள். போற்றுவோம் ஞானிகள் திருவடியை! ஒழிப்போம் பிறவி துன்பத்தை!! 

 

குறிப்பு : இறைவன் ஒருவன் தான், ஆனால் பல்வேறு வடிவத்தில் பல்வேறு பெயர்களால் பூஜித்து வருவார்கள். எல்லா பூஜையும் ஆதிசிவன் திருவடியையே சேரும்.

வாசகர் கடிதம்

     “ஞானத்திருவடி” ஓர் அரிய பொக்கிஷம். அதில் தொகுத்து வழங்கும் விதமும் அற்புதம். படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்படி ” ஞானிகளின்” அரிய கவிகளை “ஓங்காரக்குடிலாசானின் ” விளக்கங்களோடு கிடைக்கப்பெறுவது நாம் இப்புவியில் பிறந்த பாக்கியம்.

      “ஞானத்திருவடி” நூலை படிக்கும் போதெல்லாம் ஓர் விஷயம் ஞாபகத்திற்கு வருவதுண்டு. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு குடிலாசான்’ சொன்னது: ஞானிகளின்’ கருத்துக்களை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போதும் மனதில் நன்றாக பதிந்தது போல் இருக்கும். ஆனால் ஓரிரு மணித்துளிகளில், நம் வினையின் காரணமாக அவை நம்மைவிட்டு நீங்கிவிடும். அவ்வப்போது சாது சங்கத்தோடு தொடர்பு வைத்திருந்தால்தான் அந்த கருத்துக்கள் நம்மைவிட்டு நீங்காது!  

இது நாளும் நம் மனதிலிருந்த இந்த குறையை நீக்குவது “ஞானத்திருவடி”. இந்நூலை படித்து இன்புறுபோதெல்லாம் சன்மார்க்க சங்கத்தோடும், ஞானிகளோடும் தொடர்பு உடையவர்களாக இருப்பது சாத்தியம்.

– ரெங்கநாதன், வடபழனி, சென்னை .

ஞானிகள் திருஉருவப்படங்கள் மற்றும்

ஓங்காரக்குடிலாசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

ந.நடராஜன், கொள்கை பரப்பாளர்,

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,

ஓங்காரக்குடில், துறையூர். (() 04327-255784, செல்: 98947 55784

 

 

அன்பான வாசகர்களே வணக்கம்

உங்கள் ஆண்டு சந்தாவை புதுப்பித்துவிட்டீர்களா!

ஞானத்திருவடி நூலை படித்து, உங்கள் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.

அன்பன் – இரா.மாதவன், 98424 55661.

 

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய

ஏழைகளுக்குப் பசியாற்றிவைத்தால் வரும் நன்மைகள்

322) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் முற்று பெற்ற ஞானிகள் அதாவது அகத்தீசர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பதஞ்சலியார், இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்களின் பெருமையைப் பேசுவதே உண்மை என்றும், அதுவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

 323) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை அறிந்து அவ்வுயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதே உண்மை இறைவழிபாடு என்பதை அறிந்து கொள்ளலாம்.

 324) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் குணக்கேடுகளை அறிந்து வெல்லுவதற்கு அன்னதானமும் குருபக்தியாலும்தான் முடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 325) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மூச்சுக்காற்று இயக்கத்தை ஆசான் அகத்தீசரே இயக்கித் தருவார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 326) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஆசான் அகத்தீசர் ஆசி இல்லாமல் வாசிப்பயிற்சி செய்தால் அது நோய்க்கு இடமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  327) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அறநெறியில் இல்லறத்தை நடத்தியும், ஆசான் அகத்தீசரை பூஜித்தும் வந்தால் அதுவே வீடுபேற்றைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 328) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஏழைகளுக்குப் பசியாற்றினால்தான் இறையருள் பெறமுடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 329) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வன்மனம் நீங்கி நன்மனம் பெற அன்னதானம் ஒன்றே துணை புரியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 330) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் நமது எண்ணம் உயர்வைப்பற்றியே இருக்க வேண்டும், அதாவது வீடுபேற்றைப்பற்றியே என்பதை அறிந்துகொள்ளலாம்.

 331) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஆன்மீகச் சான்றோர் நட்பு மயை கிடைத்தால் பெருமைக்குரிய வாய்ப்பாகக் கருதி பாதுகாத்துக் கொள்ளலாம்

 332) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஆன்மீகச் சான்றோர்கள் நட்பே பிறவியை வெல்லும் வலிமையைத் தரும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

 333) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சிற்றின்பத்துள் பேரின்பம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 334) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மனம் ஒருநிலைப்படுவதற்கு ஆசான் அகத்தீசர் திருவடி பூஜையே சிறந்த வழி என்று அறிந்து கொள்ளலாம்.

 335) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால்முத்திக் கொழுந்து முளைக்கின்ற விந்துக்குத் தத்துவ மென்ன தராதர மென்ன விந்து வுதித்த விதத்தை யறிபவர் சத்தியும் சிவமுந்தானா குவரே – (மச்சமுனி 800ல் 792ஆம் கவி.) என்பதை அறியலாம். 

336) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் மூலப்புளி அமுரியின் பெருமையை ஆசான் அகத்தீசர் ஆசியால் அறிந்து கொள்ளலாம். 

337) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் வழலையின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

 338) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுதே அதில் உள்ள மெய்யையும், பொய்யையும் அறிந்துகொள்ளலாம்.

 339) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்ற பந்த பாசத்தை உடைத்தெறிய வேண்டும், அப்படி உடைத்தெறிய வேண்டும் என்றால் பந்தபாசத்தை உடைத்தெறிந்த ஆசான் அகத்தீசரின் ஆசியைப் பெற்றுக் கொண்டால் தான் முடியும் என்று அறிந்துகொள்ளலாம்.  

340) ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சாகாக்கல்வியின் இரகசியத்தை அறியலாம்.  

341)ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் சாகாக்கல்வியை அறிந்தாலும் அதில் வெற்றிகாண அகத்தீசர் ஆசியும், விடாமுயற்சியாலும்தான் வெல்ல முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

அடுத்த இதழில் தொடரும்.

கவனகர் முழக்கம்

 

(மாத இதழ் – ரூ. 10/-)

கவன கதின்

     ஆழமான ஆன்மீக விளக்கங்கள்

     அறிவுபூர்வமான சிந்தனையைத் தூண்டும் கருத்து மலர்கள்.

     விந்தையான பதில்கள் மற்றும் அனைத்துச் சிறப்பம்சங்களும் நிறைந்த மாத இதழ்.

தமிழர்களின் வாழ்க்கைப் பாதையை

வெற்றிப்பாதையாக மாற்ற வழிகாட்டும் இதழ்

கவனகர் முழக்கம்

ஆசிரியர் :

“பதினாறு கவனகர்”

திருக்குறள்

இராம.கனகசுப்புரத்தினம்

மேலும் விபரங்களுக்கு ..

4, இராகத் குடியிருப்பு, 2/746, கசூராத் தோட்டம், இரண்டாம் தெரு,

நீலாங்கரை, சென்னை -41. (0) 044-24490826.

மற்றும்

66, ராமசாமி வீதி, சாய்பாபா காலனி,

கே.கே. புதூர், கோவை-38. (0) 0422-2441136.

தினசரி காலை 7.30 மணிக்கு மெகா டி.வி.யில்

 

கவனகரின் எழுச்சியுரையை கேட்டு பயன்பெறுவீர்.

“சிவாய ரெங்கராஜ தேசிகாய நம”

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.                                    – குறள் 226.

குருவருள் வேண்டி

கணேஷ் ஹார்டுவேர்ஸ்

& அலுமினியம்,

No.72A – 100 அடி ரோடு, வடபழனி,

சென்னை – 600 026.

Cell : 98400 – 20828. 0 044 – 23651284, 23652568.)

 

அன்னதானம் செய்தால்

துன்பங்கள் தீரும்”

சுந்தரானந்தர்

எலக்ட்ரிகல்ஸ்

54-தெற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி,

சென்னை – 600 026.

 

 0 044-24720499, 23721160.

அகத்தியர் துணை

மகான் அம்பிகானந்தர் டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்

 பெருமாள் கோவில் தெரு, பிரசன்ன மஹால் எதிரில், துறையூர்.

JOHNSON TILES REGENCY PARRYWARE NEYCER

குரு அருள் வேண்டி . .

ASR.ராஜா 98431 58696

S.திருமுகம் 98435 68696

லட்சுமி கிரில் டிசைன்ஸ்

எல்லாவிதமான மாடர்ன் கிரில் வேலைகளும், மாடர்ன் பர்னிச்சர் வேலைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்

உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்

அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே

ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்

ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

                                                                                                        20

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு

குரு அருள் வேண்டி

ANU BUILDERSS Builders & Estates

Plot No.66, 2nd Main Road,

V.G.P. Babu Nagar, Medavakkam,

Chennai – 601 302.

Phone: 2277 0495,

Cell : 94440 70495,

E-mail: anubuilders@yahoo.com

அகத்தியர் துணை

 நிறுவனர், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

அவர்கள் தலைமையில்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளையின்

| நித்திய செயல்பாடுகள்

காலை 6.00 ஆசான் அகத்தீசர் ஜோதி வழிபாடு

ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்

தியானம் (நாமஜெபம்)

காலை 7.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்.

காலை 8.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்

காலை 9.30 சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு

தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தரிசனம்

மதியம் 12.30 பெருமாள்மலை அடிவாரத்தில் அன்னதானம்

மதியம் 1.00 ஓங்காரக்குடிலில் அன்னதானம்

மாலை 6.30 அருட்ஜோதி வழிபாடு

தியானம் (நாமஜெபம் ) ஆசான் அகத்தீசர் வழிபாடு

ஞானியர் அருளிய நூல்கள் பாராயணம்

குறிப்பு: பிரதி வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியர்கள் சிறப்பு பூஜையும், குருநாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்.

 

 

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளைக்காக வெளியிடுபவர்

S.செந்தில்குமார், நிர்வாக அறங்காவலர்,

113-நகர் விரிவாக்கம், துறையூர்-621 010, திருச்சி மாவட்டம். 

செல்: 98430 11484.

ஆசிரியர் – இரா.மாதவன்.

அச்சிட்டோர் :

இராம.தொல்காப்பியன்,

வாஞ்சி மறுதோன்றி அச்சகம், கூட்டுறவு நகர், துறையூர்.

Leave a Reply

Your email address will not be published.

Lucky Wisdom Persons

  • Visits Today: 466
  • Total Visits: 270235
  • Total Visitors: 1
  • Total Countries: 171

Watch colorized old Tamil movie
Secrets of Lord Kartikeya semen retention முருகன் ரகசியம் விந்துவை பற்றி சித்தர்