அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிகை ஹேவிளம்பி ஐப்பசி (அக்டோபர் – 2017)
முருகப்பெருமானின் கல்கி அவதாரம்
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1. சித்தர்கள் போற்றித் தொகுப்பின் சிறப்பு —
2. சித்தர்கள் போற்றித் தொகுப்பு —
3. 22.09.1997 அன்று அருளிய “சன்மார்க்கத்தில் யோகநெறி” – குருநாதர் அருளுரை
4. “பிழைபடச் சொல்லேல்” (ஆத்திசூடி) – குருநாதர் அருளுரை
வருகவே கலிகால மக்களே
வணங்கி அரங்கன் வழிமுறையை
முருகா என்று ஏற்றுவிட்டால்
முடிவுறும் மக்களாட்சி உலகில்
உலகினில் ஆறுமுகன் ஆட்சி
உதயமாகும் சடுதி இனிதே
உலகமதில் இவை மாற்றம் பெற
உலகமக்களே அரங்கன் காட்டும்
காட்டுகின்ற தரும் பாதை முறை
கட்டாயம் ஏற்று வருதல் காண
நாட்டினில் ஞான ஆட்சி உறுதி
நல்லோர்கட்கும் பதவியும் பாதுகாப்பும் உறுதி
–மகான் தேரையர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தைக் கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்பிரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.
மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 40 ஆண்டு காலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்அவர்கள், ஞானிகளின் பாடல்களில், தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.
விரைவில் எதிர்பாருங்கள் அற்புதமான “ஞானயுகம்” அமைகின்றதை!
அன்புடன் – இரா.மாதவன்.
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
பாவபரிகாரமும் சாபவிமோசனமும் பெற்றுத்தரவல்ல அற்புத பாராயண நூல்
சித்தர்கள் போற்றித் தொகுப்பு
ஞானிகள் அத்துணைபேரும் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு மும்மலக் குற்றத்தை வேருடன் அறுத்து வெற்றி கண்டவர்கள். அவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை. நரை, திரை, மூப்பு இல்லை. சித்தர்கள் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வை பெற்றவர்கள். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழில் செய்யும் வல்லமையை பெற்றவர்கள். இவர்களின் திருவடிகளை பூஜித்தாலே நாம் செய்த பாவங்களெல்லாம் நீங்கிவிடும். பாவங்களுக்கு காரணமான உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூதாடுதல், வரவுக்கு மீறிய செலவு செய்தல் இன்னும்பல தீவினை செயல்களெல்லாம் கீழ்க்கண்ட சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்தால் நீங்கிவிடும். பெருமைக்குரிய சித்தர்கள் போற்றித் தொகுப்பை ஒரு தீபம் ஏற்றி வைத்து பயபக்தியுடன் பணிந்து வணங்கி பாராயணம் செய்தால் இல்லறமும் சிறக்கும், வீடுபேறாகிய ஞானமும் கைகூடும்.
கல்வி கற்கும் மாணவர்கள் தினசரி பாராயணம் செய்தால், கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறுவதோடு நல்ல வேலை வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.
ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்ற ஆன்மீகவாதிகளுக்கு இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பானது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான பாராயண நூலாகும்.
எதை விரும்பி சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாராயணம் செய்கிறீர்களோ அதை அப்படியே பெற்றுத் தரவல்ல அற்புதமான பாராயண நூல் சித்தர்கள் போற்றித் தொகுப்பாகும். சித்தர்கள் சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்து மனிதகுலத்திற்கு பொதுவானவர்கள். ஆதலினால் சித்தர்கள் போற்றித் தொகுப்பை எல்லா சமயத்தினரும், எல்லா நாட்டினரும், பேதாபேதமின்றி பாராயணம் செய்யலாம். ஆண், பெண், குழந்தைகள், பெரியோர், குடும்பஸ்தன், துறவி, பஞ்சபராரிகள், ஏழை எளியோர் என யாவரும் பாராயணம் செய்யலாம். கணவனை இழந்தவர்களும் தடையின்றி விளக்கேற்றி பாராயணம் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை, எந்த சடங்குகளும் இல்லை.
அற்புதம் வாய்ந்த இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை பல கோடி பேர் பாராயணம் செய்து எண்ணற்ற பலன்களை அடைந்ததோடு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்திடவும், வேண்டுகோள்கள் நிறைவேறி மனம் மகிழ்ந்ததும், இவ்வுலகம் கண்ட அற்புத உண்மையாகும். இந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பை இன்னும் பலகோடி மக்கள் பாராயணம் செய்து மேன்மை அடைவார்கள் என்பது ஞானிகள் வாக்காகும்.
இதுவரையிலும் ஞானவாழ்வு அடைவதற்கு துணையாக இருந்ததும், இனி அடையப்போகின்றவர்களுக்கும் சித்தர்கள் போற்றித் தொகுப்பு துணையாகும் என்பது சத்திய வாக்காகும்.
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598
ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்